Home உலக செய்திகள் பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள கூடாது: ஆசியான் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள கூடாது: ஆசியான் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

0

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆசியான் அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானின் 33-வது அமைச்சர்கள் கூட்டம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “உலகில் புவிசார் அரசியல் சிக்கல்கள் அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில், ஆசியான் பிராந்திய மன்ற அமைச்சர்கள் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதில் இந்த மன்றம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆசியான் பிராந்திய மன்ற அமைச்சர்கள் கூட்டத்தின் செயல் திட்டத்தை இந்தியா வரவேற்கிறது. பேரிடர் நிவாரணப் பணிகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது, பொதுவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்குவது, நிகழ்நேர பயிற்சிகள் மேற்கொள்வது போன்ற கூட்டு அணுகுமுறையை இந்தியா ஊக்குவிக்கிறது.

இலங்கை, பிலிப்பைன்ஸ், ஜமைக்கா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட புயல் முதல் மியான்மர், வெனிசுலா, ஆப்கனிஸ்தான் ஆகியவற்றில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் வரை இந்தியா சமீபத்தில் பல்வேறு புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு சற்றும் சகிப்புத்தன்மை காட்டக்கூடாது. பயங்கரவாதச் செயல்களுக்கு பின்விளைவுகள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. பயங்கரவாதத்துக்கு தூண்டுதலாக இருக்கும் நிதி ஆதாரங்களைத் தடுப்பதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கடற்கொள்ளை, கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம் ஆகிவற்றை எதிர்ப்பதற்கும் வர்த்தகத்தை பாதுகாப்பதற்கும் மதிப்புமிக்க பங்களிப்பை இந்தியா செய்து வருகிறது. அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஆயுதக் குறைப்பு ஆகியவற்றை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு விஷயத்தில் பொறுப்பான, மனிதர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை அவசியம். இணையக் குற்றங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளில் ஆழமான ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். சர்வதேச நீர்வழிகள் மூலமாக நடைபெறும் வர்த்தகம் பாதுகாப்பானதாகவும் தடையின்றியும் தொடர வேண்டும்.” என தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version