தெலங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெகதீஷ் பாபு, நேற்று காலை ஹைதராபாத்துக்குத் தனியாக காரில் சென்று கொண்டிருந்தார்.
அவர் பயணம் செய்த கார், காலை சுமார் 7.15 மணியளவில் சூரியாபேட்டை மாவட்டம் பிள்ளலமர்ரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவிலிருந்த தடுப்பில் மோதியது. அடுத்த சில நிமிடங்களில் காரில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் ஓட்டுநர் இருக்கையில் இருந்த ஜெகதீஷ் பாபுவால் காரிலிருந்து வெளியேற முடியவில்லை.
தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். ஆனாலும், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. ஓட்டுநர் இருக்கையில் இருந்து கருகிய நிலையில் ஜெகதீஷ் பாபு உடல் மீட்கப்பட்டது.
போதிய தூக்கமின்மை காரணமாக ஜெகதீஷ் பாபு வாகனம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், கார் தீப்பிடித்ததற்கான துல்லிய மான காரணம் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசா ரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
