தமிழ்நாடு சூப்பர் லீக் போட்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை: தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவிப்பு

0
21

தமிழ்நாடு சூப்பர் லீக் (டிஎஸ்எல்) கால்பந்து போட்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அண்மையில் டிஎஸ்எல்-2025 என்ற பெயரில் தமிழ்நாடு சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தொடக்க விழா, சென்னை ஆவடியிலுள்ள நாசரேத் கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்றதாகவும், இந்த போட்டியில் வேவ்ஸ் எப்சி உள்ளிட்ட 4 அணிகள் பங்கேற்க போவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தப் போட்டியை நடத்துவதற்கு தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் எந்தவித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. இதற்கான முறையான அனுமதியை மாவட்ட கால்பந்து சங்கத்திடமிருந்தோ அல்லது தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகளிடமிருந்தோ, அந்த போட்டியை நடத்துபவர்கள் பெறவில்லை.

எனவே, இந்த போட்டியானது அங்கீகாரமற்ற அல்லது பதிவு செய்யப்படாத கால்பந்துப் போட்டியாகவே கருதவேண்டும். இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு தமிழ்நாடு கால்பந்து சங்கம், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தில் பதிவு செய்த வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் அல்லது அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை. அவ்வாறு அந்தப் போட்டியில் அவர்கள் பங்கேற்பது தெரியவந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தமிழ்நாடு கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here