தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) 94-வது ஆண்டு விழா சேப்பாக்கத்திலுள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை டிஎன்சிஏ தலைவர் டி.ஜே. ஸ்ரீனிவாசராஜ் வரவேற்றார். செயலாளர் பகவான்தாஸ் ராவ் ஆண்டறிக்கை சமர்ப்பித்து கடந்த ஆண்டில் டிஎன்சிஏ-வின் செயல்பாடுகள், தமிழக அணியின் சாதனை விவரங்களை விளக்கிப் பேசினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். மேலும் அவர் பேசும்போது, அடிமட்ட அளவில் கிரிக்கெட்டை கொண்டு சேர்க்க டிஎன்சிஏ எடுத்து வரும் முயற்சிகளையும், முன்னெடுப்புத் திட்டங்களையும் பாராட்டினார்.
பின்னர் கடந்த 2025-26-ம் ஆண்டில் பல்வேறு, தேசிய மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள், வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. டிஎன்சிஏ பொருளாளர் ஆர்.ரங்கராஜன் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் டிஎன்சிஏ நிர்வாகிகள் சி.மாரீஸ்வரன், கே.ஸ்ரீராம், எம்.குமரேஷ், மாவட்ட சங்க நிர்வாகிகள், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.















