இப்படியா பேசுவது? – ஜோஷ் ஹேசில்வுட் மீது முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தி!

0
43

பெர்த் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியோடு நிறைவு செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு இது உண்மையில் மிகப்பெரிய தோல்வி. அந்த அணி இதிலிருந்து மீள்வது கடினம். ஆனால், அணியை பேட்டர்கள், பவுலர்கள் என்று ஜோஷ் ஹேசில்வுட் பேசியிருப்பது கடும் அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளது.

3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ரன்கள் என்று மடிந்ததையடுத்து ஜோஷ் ஹேசில்வுட் பேட்டியளித்த போது ஆடம் கில்கிறிஸ்ட், ‘இங்கிருந்து ஆஸ்திரேலிய அணியின் அணுகுமுறை எப்படி இருக்கும்?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

அதற்கு ஹேசில்வுட், “நீங்கள் இந்தக் கேள்வியை பேட்ஸ்மேன்களில் ஒருவரிடம் கேட்டிருக்க வேண்டும். நான் ரிலாக்சாக இருக்கிறேன். ஒரு சிறிய சிகிச்சை எடுத்துக் கொள்ளப் போகிறேன். அடுத்த டெஸ்ட்டைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

உடனே ஆடம் கில்கிறிஸ்ட், ‘அணியில் பேட்டர்கள், பவுலர்கள் என்று பிளவு இருக்கிறதா என்ன?’ என்றார். ஜோஷ் ஹேசில்வுட் இப்படிக் கூறியது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஒன்று டெஸ்ட் போட்டியில் இன்னும் 2 நாட்கள் இருக்கும் போது ‘நான் அடுத்த டெஸ்ட்டை எதிர்நோக்குகிறேன்’ என்று பொறுப்பில்லாமல் பேசியது, இன்னொன்று பேட்ஸ்மேன்களிடம் தான் கேட்க வேண்டும் என்று ஏதோ அணி பேட்டர்கள், பவுலர்கள் என்று பிளவுண்டு கிடப்பது போல் பேசியது.

டேவிட் வார்னர் உடனடியாக ஹேசில்வுட் கருத்தை எதிர்த்துள்ளார்: “எல்லா பேட்டர்களும் கிரீசிற்குச் சென்று நன்றாக ஆட வேண்டும் என்றுதான் செல்வார்கள். ஒரு சீனியர் வீரராக அணியைப் பிரதிநிதித்துவம் செய்யும் போது அக்கறை வேண்டும். ரன்கள் இல்லை, ஆனால் ஹேசில்வுட் போன்ற மூத்த பவுலர் ஒருவர் இப்படிப் பேசுவது தேவையற்றது.

அணியில் பிளவெல்லாம் ஒன்றுமில்லை. நீண்ட காலம் கழித்து ஒன்று சேரும்போது பெரிய அணிகளில் கூட ஒருவரையொருவர் குற்றம்சாட்ட முடிகிறது. ஆனால் பிளவு ஒன்றும் இல்லை. ” என்றார்.

முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், “ஒரு ஆஸ்திரேலிய வீரர் வெளிப்படையாக பேட்டர், பவுலர் என்று பிரித்து பேசுவதை இப்போதுதான் கேட்கிறேன். 11 பேட்டர்கள் இருக்கின்றனர், இது மாறவே மாறாது அனைவரும் தான் பேட் செய்ய வேண்டும். அதுவும் அடுத்த போட்டியை எதிர்நோக்குகிறேன் என்று ஹேசில்வுட் போன்ற ஒருவரே கூறும்போது நான் இதுவரை ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் இப்படிப் பேசிப் பார்த்ததில்லை. களத்தில் ஸ்பிரிட் இல்லாமல் ஆடினர் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு ஒருபோதும் சாற்ற முடியாது” என்றார்.

ரவி சாஸ்திரி கூறும்போது, “இது போன்ற கருத்துகள், பிட்சில் இருக்கும் பிளவுகளுடன் மண்டையில் உள்ள பிளவுகளையும் காட்டுகிறது” என்று கிண்டலடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here