பகவத் கீதை மீது கைவைத்து பதவிப் பிரமாணம்: கவனம் ஈர்த்த எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல்!

0
184

அமெரிக்காவின் எஃப்பிஐ (FBI) புலனாய்வு அமைப்பின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுக் கொண்டார். இப்பதவியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அலங்கரிப்பது இதுவே முதன்முறை. காஷ் படேல் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

காஷ் படேல் பதவியேற்பு விழாவில் அவருடன் அவரது காதலி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். காஷ் படேலுக்கு அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது, காஷ் படேல், இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையின் மீது கைகளைவைத்து பதவிப் பிரமாண உறுதிமொழியேற்றார்.

பதவியேற்பு விழாவில் பகவத் கீதையின் சாட்சியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர்களில் காஷ் படேல் இரண்டாவது நபராகிறார். ஏற்கெனவே சுஹாஷ் சுப்ரமணியம் கீதையின் சாட்சியாக பதவியேற்றது நினைவுகூரத்தக்கது, இந்திய வம்சாவளி வழக்கறிஞரான சுஹாஸ் சுப்ரமணியம் வர்ஜீனியா மற்றும் கிழக்குக் கடற்கரையில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

பதவியேற்புக்குப் பின்னர் பேசிய காஷ் படேல், “உலகின் மிகப் பெரிய நாடான அமெரிக்காவின் சட்ட அமலாக்க முகமைக்கு தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள். FBI-க்கு உள்ளேயும், அதற்கு வெளியேயும் பொறுப்புடன் செயல்படுவேன்.” என்றார்.

எந்த மூலையில் இருந்தாலும்.. முன்னதாக நேற்று அவர் அளித்த பேட்டியில், “வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய, நீதிக்கு உறுதியளிக்கும் ஒரு மத்திய புலனாய்வு அமைப்பினைப் பெறுவதற்கு அமெரிக்க மக்கள் தகுதியானவர்கள். ஆனால், அண்மைக்காலமாக நமது நீதி அமைப்பு அரசியல்மயமாக்கப்பட்டது. இதனால் பொதுமக்களிடம் நம்பிக்கைய அது இழந்து விட்டது. அந்த அவநம்பிக்கை இன்றுடன் முடிவடைகிறது. எஃப்பிஐ தலைவராக எனது இலக்கு தெளிவானது. அது எஃப்பிஐ-ன் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே.

அமெரிக்கர்களுக்கு தீங்கிழைப்பவர்களே இதை உங்களுக்கான எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பிரபஞ்சத்தின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் நாங்கள் உங்களை வேட்டையாடுவோம். கடமைக்கே முக்கியத்துவம். அமெரிக்காவுக்கே முன்னுரிமை. நம் வேலையைத் தொடங்குவோம்.” என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் எஃப்பிஐ இயக்குநராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து ட்ரம், “காஷ் படேல் அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என நம்புகிறேன். புலனாய்வு ஏஜன்ட்டுகளுக்கு காஷ் படேலை பிடிக்கும்.”என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here