நடிகை கஸ்தூரி மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கை – ஜாமீன் மனு இன்று விசாரணை

0
272

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள நடிகை கஸ்தூரி அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிராமணர் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர். எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி நவ.3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், திரைப்பட நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எழும்பூர் போலீஸார் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர். அவருக்கு சம்மன் அளிக்கச் சென்றபோது அவரது வீடு மூடியிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். முன்னதாக முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர். பின்னர், நேற்று முன்தினம் சென்னை அழைத்து வந்து, ஒன்றரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

சிறையில் நடிகை கஸ்தூரி தூக்கமின்றி தவித்து வருவதாகவும் சரியாக சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க அவர் மீதான அடுத்தடுத்த வழக்குகளிலும் கஸ்தூரியை கைது செய்யும் பணியை போலீஸார் முடுக்கி விட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னையை பொருத்தவரை கோயம்பேடு மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் உள்ளது. அதேபோல் மதுரை, கோவை, கும்பகோணம் என மொத்தம் 6 புகார்கள் அவர் மீது உள்ளன. இவ்வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க நடிகை கஸ்தூரி சார்பில் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், நான் தனிமையில் வசித்து வருகிறேன். கணவர் ஆதரவு கிடையாது. நான் தலைமறைவாகவில்லை. என்னுடைய சென்னை வீட்டில் போலீஸார் சம்மன் ஒட்டியது எனக்கு தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தை பரிதவித்து விடும். எனவே எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என அதில் கோரியுள்ளார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here