அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடை, காணிக்கை பணம் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு உள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரி விஜய் விஷ்வாஸ், மூத்த ஐபிஎஸ் அதிகாரி கிரண், நிதித்துறை சிறப்பு செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் அடங்கிய எஸ்ஐடி குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் அண்மையில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். புதிய பொதுச்செயலாளராக கிருஷ்ண மோகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த சூழலில் எஸ்ஐடி குழுவை சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி கிரண் மற்றும் அயோத்தி பகுதி டிஐஜி சோமன் வர்மா, மூத்த போலீஸ் அதிகாரி கவுரவ் குரோவர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அயோத்தி எஸ்பிஐ வங்கியில் உள்ள ராமர் கோயிலின் லாக்கர்களில் நேற்று சோதனை நடத்தினர். ராமர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி நகைகள், பொருட்கள் இந்த லாக்கர்களில் வைக்கப்பட்டு உள்ளன.
கோயில் பதிவேடுகளின் கணக்குகளை ஒப்பிட்டு வங்கி லாக்கர்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் கிருஷ்ண மோகன் உடன் இருந்தார்.















