இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி 20 ஆட்டம் நேற்று முன்தினம் இரவு தம்புலாவில் நடைபெற்றது. மழை காரணமாக இந்த ஆட்டம் 12 ஓவர்களாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. கேப்டன் தசன் ஷனகா 9 பந்துகளில், 5 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் விளாசினார். குஷால் மெண்டிஸ் 30, ஜனித் லியனகே 22, கமில் மிஷ்ரா 20, சரித் அசலங்கா 21 ரன்கள் சேர்த்தனர்.
161 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியால் 12 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆகா 12 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் விளாசினார். மொகமது நவாஷ் 28, கவாஜா நபே 26 ரன்கள் சேர்த்தனர்.
இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்கா 4, மதீஷா பதிரனா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 1-1 என சமனில் முடித்தது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
சர்வதேச டி 20-ல் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் 14 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் பாகிஸ்தான் அணியை தோற்கடித்துள்ளது. கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இலங்கை அணி கடந்த 2012-ம் ஆண்டு வெற்றி கண்டிருந்தது. மதீஷா பதிரனா பந்தில் போல்டான மொகமது நவாஷ்.



