இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
கெபர்காவில் நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி ரியான் ரிக்கெல்டன் (101), கைல் வெரெய்ன் (105) ஆகியோரது சதம் காரணமாக 358 ரன்கள் குவித்தது. அதேவேளையில் இலங்கை அணி 328 ரன்கள் எடுத்தது. பதும் நிஷங்கா 89, கமிந்து மெண்டிஸ் 48 ரன்கள் சேர்த்தனர். 30 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 317 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் தெம்பா பவுமா 66, எய்டன் மார்க்ரம் 55 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து 348 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 52 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. பதும் நிஷங்கா 18, திமுத் கருணரத்னே 1, தினேஷ் சந்திமால் 29, ஏஞ்சலோ மேத்யூஸ் 32, கமிந்து மெண்டிஸ் 35 ரன்களில் ஆட்டமிழந்தனர். தனஞ்ஜெயா டி சில்வா 39, குஷால் மெண்டிஸ் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி மேற்கொண்டு 33 ரன்களை சேர்ப்பதற்குள் எஞ்சிய அனைத்து விக்கெட்களையும் இழந்தது. குஷால் மெண்டிஸ் 46, தனஞ்ஜெயா டி சில்வா, பிரபாத் ஜெயசூர்யா 9, விஷ்வா பெர்னாண்டோ 5, லகிரு குமரா 1 ரன்னில் வெளியேறினர். முடிவில் இலங்கை அணி 69.1 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். காகிசோ ரபாடா, டேன் பாட்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக டேன் பாட்டர்சன் தேர்வானார். அவர், முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வேட்டையாடி இருந்தார். 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முழுமையாக 2-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. தொடர் நாயகனாக தெம்பா பவுமா தேர்வானார்.