ஜாஷ் ஹேசில்வுட்டின் தனிச் சிறப்பு பந்துவீச்சில் சரணடைந்த தென் ஆப்பிரிக்கா!

0
18

டர்பன் டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் துல்லியத் திலகம் ஜாஷ் ஹேசில்வுட் 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன் வாழ்நாள் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை வீச, 206 ரன்களுக்குச் சுருண்ட தென் ஆப்பிரிக்கா 214 ரன்களில் படுதோல்வி கண்டு தொடரில் 0-1 என்று பின்னடைவு கண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு கடைசி நாளில் 25.4 ஓவர்கள் வரை அய்டன் மார்க்ரம் மற்றும் வியான் முல்டர் கடும் சவால் அளித்தனர். ஆனால், முல்டரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஹேசில்வுட் ஆட்டத்தை மீண்டும் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். லெக்-ஸ்லிப் வீரர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அலெக்ஸ் கேரி ஒரு கையால் அபாரமாக கேட்ச் பிடித்து முல்டரை வெளியேற்றினார்.

அதன்பிறகு ஹேசில்வுட் தனது வேகத்தையும் பவுன்சையும் சிறப்பாக பயன்படுத்தினார். புதிய பந்தை கையில் எடுத்த அவர், மார்கோ யான்சனின் தடுப்பாட்டத்தைத் தாண்டிச் சென்று பெயில்ஸைத் அற்புதமாகக் கீழே விழச்செய்த பந்தை வீசி அசத்தினார். மூன்று பந்துகளுக்குப் பிறகு, குட் லெங்க்த்துக்கு சற்று முன்னே பிட்ச் செய்து எழுப்பிய பந்தை சைமன் ஹார்மர் தடுத்தாட அது கையுறை வழியாக அலெக்ஸ் கேரியிடம் கேட்சாகச் சென்றது. அந்தப் பந்தில் ஹார்மர் மட்டையை வெறுமனே உயர்த்தினார் அவ்வளவே மற்றபடி பந்தே கையுறையில் பட்டு கேட்சிற்குச் சென்றது.

இறுதியில் அன்ரிச் நோர்க்யா பந்தை லெக்-சைடில் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்தபோது, ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதியானது. இதன்மூலம் ஹேசில்வுட் 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது டெஸ்ட் வாழ்க்கையின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

இந்தப் போட்டியிலேயே அவர் ஆஸ்திரேலியாவின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறினார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீயின் 310 விக்கெட்டுகளை அவர் கடந்தார். ஆஸ்திரேலியாவின் தற்போதைய முதல் நான்கு இடங்களில் உள்ள வீரர்களில் இருவர் வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிங்ஸ்மீட் மைதானத்தின் 5-வது நாள் ஆடுகளம் ஹேசில்வுட்டின் பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. சீரற்ற பவுன்ஸ், குட் லென்த்தில் பந்து வீசும்போது கிடைத்த உதவி மற்றும் சரியான நேரத்தில் வீசிய பவுன்சர்கள் ஆகியவை அவருக்கு கூடுதல் பலமாக அமைந்தன.

முந்தைய நாள் மாலையிலேயே பவுன்சரில் ரியான் ரிக்கிள்டனை புல் ஷாட்டில் டாப்-எட்ஜ் செய்ய வைத்து ஹேசில்வுட் முதல் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். பின்னர் டேவிட் பெடிங்காமை அற்புதமாக ஒர்க் அவுட் செய்து ரிவர்ஸ்-ஸ்விங்கை பயன்படுத்தி எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றி, இரண்டாவது விக்கெட் கூட்டணியையும் உடைத்தார். பெடிங்காம் தொடர்ந்து நகர்ந்து நகர்ந்து வந்து ஆடியதை தென் ஆப்பிரிக்கா கோச் பார்த்து களத்திற்கு வீரரை அனுப்பி எச்சரித்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை, பார்க்கும் நமக்கே தெரிந்தது பெடிங்காம் எல்.பி.ஆகப்போகிறார் என்பது.

ஹேசில்வுட்டின் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டை ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் வெகுவாகப் பாராட்டினார்.

“அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவரது நிலைத்தன்மை குறித்து அதிகம் பேசப்படுவதால், அவருடைய திறமை சில நேரங்களில் குறைத்து மதிப்பிடப்படுகிறது. புதிய பந்தில் அவர் மிகவும் திறமையானவர். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கிய பிறகும், இருபுறமும் பந்தை ஸ்விங் செய்யும் அளவுக்கு அவர் திறமையானவர்” என்று கம்மின்ஸ் கூறினார்.

கடந்த 3 ஆண்டுகளிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹேசில்வுட் வீழ்த்திய ஒவ்வொரு விக்கெட்டுக்கும் செலவான சராசரி ரன்கள் 17.93-ஐ தாண்டவில்லை. 2026-ல் அவரது பந்துவீச்சு சராசரி 14.43 ஆக உள்ளது. 2024-ல் இது 13.60 ஆக இருந்தது. அவரது துல்லியமும், கட்டுப்பாடும் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here