சினிமா தொடங்கிய காலம் முதல் கதாநாயகர்களின் ஆதிக்கமுள்ள துறையாக இருந்து வரும் நிலையில், அவர்களுக்கு இணையான வாய்ப்புகளும் இடமும் நாயகிகளுக்கு கிடைப்பது எளிதானதல்ல. அதையும் மீறி சில நடிகைகள் அழுத்தமான பாத்திரங்களில் நடித்து பார்வையாளர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். பானுமதி, பத்மினி, ஜெயலலிதா என தொடரும் வரிசையில் மறக்க முடியாத பெயர், சவுகார் ஜானகி.
பரிதாபத்தை வரவழைக்கும் கதாபாத்திரங்களில் அவர் இயல்பாக பொருந்திவிடுவதால் அதுபோன்ற படங்கள் அதிகம் கிடைத்தன. பாக்கியலட்சுமி, குமுதம், படிக்காத மேதை, பார் மகளே பார், காவியத் தலைவி, ஒளி விளக்கு போன்ற படங்களில் அவர் சோகமான கதாபாத்திரங்களில் நடித்து பார்வையாளர்களைக் கண்ணீர் விட வைத்தார். ‘எதிர்நீச்சல்’, ‘பாமா விஜயம்’ ஆகிய படங்களுக்கு பிறகு அவரை பற்றிய ‘சோக கதாபாத்திர’ பேச்சு மாறியது.
அதேபோல், புதிய பறவை, உயர்ந்த மனிதன் போன்ற படங்களில் மிடுக்கான தோரணை, ஸ்டைலிஷான நடிப்பின் மூலம் தன்னால் எந்த மாதிரியான பாத்திரத்திலும் ஜொலிக்க முடியும் என நிரூபித்தார். ‘இரு கோடுகள்’ படத்தில் மாவட்ட ஆட்சியராக, ஆளுமையான தோற்றத்தில் வந்து மிரட்டினார். மற்றொரு பக்கம் பாமா விஜயம், தில்லுமுல்லு உள்ளிட்ட படங்களில் நகைச்சுவையிலும் கலக்கியிருப்பார்.
பாலும் பழமும், மோட்டார் சுந்தரம் பிள்ளை, பணம் படைத்தவன் போன்ற படங்களில் அவரது கதாபாத்திரங்கள் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டன. சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தது மகிழ்ச்சியான தற்செயல்.
சினிமா எனக்கு புகழையும், பொருளாதாரத்தையும் மனநிறைவையும் கொடுத்திருக்கிறது. இதற்கு மேல் ஒருவர் என்ன எதிர்பார்க்க முடியும்?” என்று மனநிறைவுடன் கூறியிருந்த ஜானகி, கதாநாயகியாக நடிக்க ஆரம்ப காலத்தில் பல்வேறு போராட்டத்தைச் சந்தித்திருக்கிறார்.
“அந்தக் காலத்தில் கதாநாயகிகள் குண்டாகவும் நல்ல உடல்வாகுடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். நாயகியாக நடிப்பதற்குத் தேவையான உயரமும், தோற்றமும்இல்லை என்று என்னிடமே சொன்னார்கள். பிறகு வாய்ப்புகள் வந்தன. துன்பப்படும் மனைவி, கைவிடப்பட்ட காதலி போன்ற கதாபாத்திரங்களே ஆரம்பத்தில் கிடைத்தன.
எனது முகம் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களுக்குத்தான் பொருத்தமாகத் தெரிந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? அப்படி நடிப்பதில் எனக்கும் சலிப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. எனக்கு புகழும் பணமும் தேவைப்பட்ட காலத்தில், இரண்டையுமே அந்தக் கதாபாத்திரங்கள் எனக்குக் கொடுத்தன” என்று தெரிவித்துள்ளார்.















