ஏற்காடு மலை அமைந்துள்ள சேர்வராயன் மலைத் தொடரில் கடந்த ஒரு மாதமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், காபி செடிகளில் காய்கள் பழுப்பது தடைபட்டுள்ளது. இதனால் அறுவடை தாமதமாவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு, தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த மலைத் தொடர் கடல் மட்டத்திலிருந்து 4,000 முதல் 5,000 அடி உயரம் கொண்டது. இதனால் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் இதமான தட்பவெப்பம் நிலவும். எனவே, இப்பகுதியில் காபி, மிளகு உள்ளிட்ட பணப் பயிர்களும், கமலா ஆரஞ்சு, பலா, பேரிக்காய் உள்ளிட்ட பழ வகைகளும் பயிரிடப்படுகின்றன. தற்போது சேர்வராயன் மலைத் தொடரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக காபி செடிகளில் உள்ள காய்கள் பழுக்காமல் உள்ளன. இதனால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர் மாலதி கூறியதாவது: சேர்வராயன் மலைத் தொடரில் ஏற்காடு, நாகலூர், பட்டிப்பாடி வேலூர், கொளகூர், வெள்ளக்கடை, செம்மநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் அராபிகா, சந்திரகிரி உள்ளிட்ட வகைகளில், 7,000 ஹெக்டேரில் காபி சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு ஏப்ரல், மே மாதங்களில் பெய்த மழையால் காபி செடிகளில் மொட்டுகள் பூத்து, காய்கள் அதிகரித்தன. வழக்கமாக நவம்பர் மாதத்தில் அவை பழுத்துவிடும். இதனால் நவம்பரிலேயே செடிகளில் இருந்து காபி பழங்கள் அறுவடை செய்யப்பட்டுவிடும்.
ஆனால், நடப்பாண்டு நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே ஏற்காட்டில் மழையுடன், கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், காபி செடிகளில் காய்கள் பழுக்காமல் உள்ளன. எனவே, பல கிராமங்களில் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. கொளகூர் உள்ளிட்ட சில கிராமங்களில் மட்டும் அறுவடை தொடங்கிஉள்ளது.
விளைச்சல் பாதிக்காது… பெரும்பாலான இடங்களில் காபி அறுவடை வழக்கத்தைவிட ஒரு மாதம் தாமதமாகியுள்ளது. எனினும், காபி விளைச்சலில் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார். அதேநேரத்தில், தொடர் பனிப்பொழிவால் காபி பழங்கள் அறுவடை தாமதமாவதால், அவற்றின் வருவாயை எதிர்பார்த்திருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.














