சக் ஷம் 2025: புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் – துறைமுக பொறுப்பு கழக தலைவர் வேண்டுகோள்

0
35

‘‘சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்’’ என, சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் சார்பில், எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘சக்ஷம் 2025’ நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மாநில தலைவர் எம்.அண்ணாதுரை, இந்தியன்ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (சில்லரை வர்த்தகம்), எம். சுதாகர் முன்னிலையில், சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர் சுனில் பாலிவால் தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டின் கருப்பொருள் “பசுமை மற்றும் தூய்மை ஆற்றல் மூலமாக தூய்மையான சுற்றுச் சூழல்” என்பதாகும். இந்த சக்ஷம் பரப்புரை, எரிபொருள் சிக்கனம், ஆற்றல் செயல்திறன், தூய்மையான, பசுமை எரிபொருள் ஆதாரங்களின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை குறிக்கோளாக கொண்டது ஆகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சுனில் பாலிவால், ‘‘எரிபொருள் சிக்கனமும், சுற்றுச்சூழல் பொறுப்பும் இன்றைய அவசர அத்தியாவசிய தேவையாகும். ஆற்றல்களின் தேவைகள் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு குடிமகனும் தூய்மை எரிபொருள் பயன்பாடு, வீணடிக்காமல் இருத்தல், ஆற்றல் செயல்திறன் மிக்க வழிமுறைகளைப் பின்பற்றுதல் மூலமாக தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இந்த சக்ஷம் முன்முயற்சியானது, பொறுப்பு மிக்க ஆற்றல் நுகர்வு குறித்தும் வருங்கால தலைமுறைகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து எடுத்துரைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத புதுப்பிக்க தக்க ஆற்றலை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில், வரவேற்புரை ஆற்றிய எம்.அண்ணாதுரை, ‘‘இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பு இலக்குகளை அடைவதில் சக்ஷம் 2025 முக்கியப் பங்க வகிக்கிறது’’ என்றார்.

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பொது மேலாளர் (மண்ணியல்) டி. ஆறுமுகம் சக்ஷம் 2025க்கான உறுதி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். சக்ஷம் 2025 ன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தீவிரமான, பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும்.

சைக்கிள் பேரணி, நடை ஊர்வலம், சமையல் எரிவாயு சிக்கனம் குறித்த பயிற்சி நிகழ்ச்சிகள், மின்சார வாகன பேரணிகள் ஆகியவை நடத்தப்படும். மேலும், ஆற்றல் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை இளைய சமுதாயத்தினரிடையே ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலரங்குகள், விவாத மேடைகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் ஆகியவை நடத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில், ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் மண்டல பொது மேலாளர் (சில்லரை விற்பனை) ஹர்ப்ரீத் எஸ். துதேஜா, பிபிசிஎல் நிறுவனத்தின் பொது மேலாளர் (சில்லரை விற்பனை) டி. கண்ணபிரான், சிபிசிஎல் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் அனில் சஹானி மற்றும் கெயில் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் வர்ஷா ராம்தேக்கே மற்றும் எண்ணெய், எரிவாயு துறை சார்ந்த மூத்த அதிகாரிகள், துறை சார்ந்த வல்லுநர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here