Home மாநில செய்திகள் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தேவையற்றது: பி.ஆர்.பாண்டியன் கருத்து

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தேவையற்றது: பி.ஆர்.பாண்டியன் கருத்து

0

காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மண்டல அளவிலான விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஹரிதாஸ் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த ஐந்தாண்டு காலமாக விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையே செயல்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக போராடும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும், பொய் வழக்கு போட்டும் அச்சுறுத்துகிறது.

காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் விவசாயிகள் பயன்படுத்தி வரும் அனாதீன நிலங்களுக்கு பட்டா வழங்கவில்லை. இதனால் அவர்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

சென்னையில் ஏற்கெனவே உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம் உள்ள நிலையில், நீர் ஆதாரமாக விளங்கும் 4,000 ஏக்கர் பரப்பளவு ஏரிகளையும் விவசாய நிலங்களையும் அழித்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முயல்வது தேவையற்றது.

ஓசூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட 3,000 ஏக்கர் நிலத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தும், அந்த நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க மாநில அரசு மறுக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியத்தில் தனியார் நிறுவனம் 470 ஏக்கர் விளைநிலங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துச் சுவர் எழுப்பியுள்ளது. நில மாஃபியாக்களின் ஆதாயத்துக்காக திமுக ஆட்சியில் காவல்துறை ஏவி விடப்படுகிறது.

நீர்ப்பாசனத் துறை அமைச்சராக அனுபவமிக்க துரைமுருகன் இருந்தும், கடந்த 4 ஆண்டுகளாக நிதி ஒதுக்காததால் பாலாறு, தென்பெண்ணை, காவிரி போன்ற ஆறுகள் தூர்வாரப்படாமல் பாசனக் கட்டமைப்புகள் முடங்கியுள்ளன.

நெல் கொள்முதலைத் தனியாருக்குத் தாரை வார்த்துள்ள தால் முறைகேடுகள் பெருகிவிட் டன; விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்கப்படுவதில்லை.

எனவே இந்தத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக விவசாயிகள் வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக விவசாய சங்கத் தலைவர் கே.எம். ராமர், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.கே.வி. துரைசாமி, மதுரை மண்டலத் தலைவர் எல்.ஆதிமூலம், சென்னை மண்டலச் செயலாளர் ராஜசேகர் மற்றும் பரந்தூர் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உள்பட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version