ஹூண்டாய் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் செலவில் 18 அரசு பள்ளிகளுக்கு 900 இருக்கைகள் வழங்கப்பட்டன.
ஹூண்டாய் மொபிஸ் சிஎஸ்ஆர் எனப்படும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் மாணவர்களின் பயன்பாட்டுக்காக 18 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.70 லட்சம் செலவில் 900 இருக்கைகளை (Bench Desk) வழங்க முன்வந்தது.
அரசுப் பள்ளிகளுக்கு இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி எழும்பூர் பிரசிடென்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு 18 அரசுப் பள்ளிகளுக்கு இருக்கைகளை வழங்கினர். பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அவற்றை பெற்றுக்கொண்டனர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
பேசுகையில், “அடுத்த 10 ஆண்டுக்குள் அரசுப் பள்ளிகளை நாட்டின் தலைசிறந்த பள்ளிகளாக உருவாக்குவோம். பள்ளிகளில் பிற பாடங்களைப் போன்று உடற்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
உடற்கல்விக்கு வாரம் இரு பாடவேளைகள் மட்டும் இருப்பது போதாது. பிற பாடங்களைப் போன்று உடற்கல்விக்கும் தினமும் வகுப்புகள் நடைபெற வேண்டும்” என்றார் அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, “மாணவர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் தவெக அரசு செய்யும்.
அதற்கு பதிலாக, மாணவர்கள் தங்கள் தன்னம்பிக்கை, தமிழ் ஆர்வம், தலைமைத்துவப் பண்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ், ஹூண்டாய் மொபிஸ் நிறுவனப் பொதுமேலாளர் ஹூமின் ஹோ, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
