தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவிழிவேந்தன், தனது மனைவி ஜமுனாவை பிரசவத்துக்காக மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்திருந்தார். அங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோர் பிரசவம் பார்த்த நிலையில், ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து ஜமுனாவுக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதையடுத்து, ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஜமுனா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக 2019-ம் ஆண்டு நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
பிரசவத்தின்போது உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு 4 வாரத்துக்குள் ரூ.5 லட்சத்தை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இடையே 24 மணி நேரமும் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைக்க சுகாதாரத் துறை துணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தொடர் ஆய்வும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் திடீர் ஆய்வும் மேற்கொள்ள வேண்டும். 24 மணி நேரமும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நன்கு பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்த வேண்டும். இது தொடர்பான வழிகாட்டுதலை பொதுசுகாதாரத் துறை இயக்குநருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.