திருவேற்காடு அருகே வானகரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் பாலாஜி முருகதாஸ். தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், ‘பயர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் போதைப் பொருள் பயன்படுத்துவதாகவும், அவர்தன் வீட்டில் போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பதாகவும் நேற்று முன்தினம் திருவேற்காடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் திருவேற்காடு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் பாலாஜி முருகதாஸ் வீட்டுக்கு சோதனைக்காக சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி முருகதாஸ், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
போலீஸாரின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் அவர் வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. “உங்கள் வீட்டில் போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசியத் தகவலையடுத்து, சோதனை செய்ய வந்துள்ளோம்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அப்போது, பாலாஜி முருகதாஸ், “சோதனை செய்வதற்கான எவ்வித முறையான ஆவணங்களும் இல்லாமல் என் வீட்டில் சோதனை செய்வது கண்டிக்கத்தக்கது.
நான் போதைப் பொருள் பயன்படுத்துகிறேனா என்பதை எனக்கு ரத்தப் பரிசோதனை செய்து அறிந்துகொள்ளுங்கள்” என்று கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
போலீஸார் தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதில், எந்த போதைப் பொருளும் கிடைக்கவில்லை. இதுகுறித்த தகவல்களை பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலாஜி முருகதாஸ் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இச்சோதனை நடந்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.














