ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சைம் அயூப்பின் அதிரடி சதத்தால் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.
புலவாயோ நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 32.3 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டியோன் மேயர்ஸ் 33, சீயன் வில்லியம்ஸ் 31, கேப்டன் கிரெய்க் எர்வின் 18, சிகந்தர் ராஸா 17 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான அப்ரார் அகமது 8 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான சல்மான் ஆகா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
146 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 54 பந்துகளில் தனது முதல் சதத்தை விளாசிய இடது கை பேட்ஸ்மேனான சைம் அயூப் ஒட்டுமொத்தமாக 62 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அப்துல்லா ஷபிக் 48 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார்.
10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி நாளை (28-ம் தேதி) நடைபெறுகிறது.
3-வது விரைவு சதம்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சைம் அயூப் 54 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானின் மூன்றாவது அதிவேக சதம் இதுவாகும். இதற்கு முன்னர் ஷாகிப் அப்ரிடி 1996-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 37 பந்துகளிலும், 2005-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 45 பந்துகளிலும் சதம் அடித்திருந்தார்.