ரஷ்யாவில் ரயில் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்ய அந்த நாடு ஆர்வம் காட்டி வருகிறது. அத்துடன் இந்தியாவிலேயே ரஷ்யாவுக்கு தேவையான ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான உற்பத்தி மையத்தை தொடங்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த வாரம் ரஷ்யாவின் மிகப்பெரிய ரயில் நிறுவனமான டிஎம்எச், இந்திய ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ரஷ்யாவின் டிஎம்எச் நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவில் படுக்கை வசதியுடன் கொண்ட வந்தே பாரத் ரயில் உற்பத்தியில் பங்கேற்றுள்ளது. இதுகுறித்து ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், ‘‘ரஷ்யாவில் ரயில்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. அதனால், இந்தியாவில் முதலீடு செய்யவும், உதிரி பாகங்களை கொள்முதல் செய்யவும், ரயில் உற்பத்தி மையத்தை அமைக்கவும் அந்த நாடு மிகவும் ஆர்வமாக உள்ளது’’ என்றார்.
இதுகுறித்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய செய்தியாளர்களை சந்தித்த டிஎம்எச் சிஇஓ கிரில் லிபா கூறியதாவது: மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் வட்டி விகிதம் வித்தியாசமாக உள்ளது. எனவே, இந்தியாவில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே ரஷ்யாவுக்கு ரயில் தொடர்பான பல்வேறு பாகங்களை சப்ளை செய்வதற்காக பல இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அந்த நிறுவனங்களுடன் எங்களுக்கு சிறந்த உறவு உள்ளது. எனவே, அந்த நிறுவனங்களிடம் இருந்து இன்னும் கூடுதலாக பாகங்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கிரில் லிபா கூறினார்.
 
            

