இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய ரஷ்யா எப்போதும் தயார் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தின. இந்தியா தொடர்ந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கியது. இது உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தார் ட்ரம்ப்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் இந்தியாவுக்கான வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது, இதையடுத்து கடந்த சில வாரங்களாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்தது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கச்சா எண்ணெய் வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டால், அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை மீண்டும் விதிக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்க ரஷ்யா எப்போதும் தயார் என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.














