ரிஷப் பந்த் ரூ.27 கோடி, ஸ்ரேயாஸ் ரூ.26.75 கோடி, அஸ்வின் ரூ.9.75 கோடி – ஐபிஎல் ஏலம் நாள் 1 ஹைலைட்ஸ்

0
28

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெற்ற ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த்தை, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) நிர்வாகம், ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொண்டனர். ஏலத்தில் அதிக அளவாக ரிஷப் பந்த்தை ரூ.27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. அணி வாரியாக வாங்கிய வீரர்களின் விவரம்:

லக்னோ: ரிஷப் பந்த்தை ரூ.27 கோடிக்கும், அவேஷ் கானை ரூ.9.75 கோடிக்கும், டேவிட் மில்லரை (தென் ஆப்பிரிக்கா) ரூ.7.5 கோடிக்கும், மிட்செல் மார்ஷை (ஆஸ்திரேலியா) ரூ.3.4 கோடிக்கும், எய்டன் மார்கிரமை (தென் ஆப்பிரிக்கா) ரூ.2 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி. அப்துல் சமாதினை ரூ.4.20 கோடிக்கும் வாங்கியது.

பஞ்சாப்: ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. ரிஷப் பந்த்துக்குப் பிறகு அதிக தொகைக்கு ஏலத்தில் ஸ்ரேயாஸ் எடுக்கப்பட்டார். மேலும் அந்த அணி யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தலா ரூ.18 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸை ரூ.11 கோடிக்கும், கிளென் மேக்ஸ்வெல்லை (ஆஸ்திரேலியா) ரூ.4.2 கோடிக்கும் அந்த அணி வாங்கியது. ஹர்ப்ரீத் பிராரை ரூ.1.50 கோடிக்கும் வாங்கியது.

கொல்கத்தா: வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது. மேலும் குயின்டன் டி காக்கை (தென் ஆப்பிரிக்கா) ரூ.3.6 கோடிக்கும், ரஹ்மானுல்லா குர்பாஸை (ஆப்கானிஸ்தான்) ரூ.2 கோடிக்கும் அந்த அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. அங்கிரிஷ் ரகுவன்ஷியை ரூ.3 கோடிக்கும் வாங்கியது.

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இஷான் கிஷனை ரூ.11.25 கோடிக்கும், முகமது ஷமியை ரூ.10 கோடிக்கும், ஹர்ஷல் படேலை ரூ.8 கோடிக்கும் வாங்கியது. அபினவ் மனோகரை ரூ.3.20 கோடிக்கும், அதர்வா டைடேவை ரூ.30 லட்சத்துக்கும், ராகுல் சஹரை ரூ.3.20 கோடிக்கும், ஆடம் ஸாம்பாவை (ஆஸ்திரேலியா) ரூ.2.40 கோடிக்கும் வாங்கியது.

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஜோஷ் ஹேசில்வுட்டை (ஆஸ்திரேலியா) ரூ.12.5 கோடிக்கும், பில் சால்ட்டை (இங்கிலாந்து) ரூ.11.5 கோடிக்கும், ஜிதேஷ் சர்மாவை ரூ.11 கோடிக்கும், லியாம் லிவிங்ஸ்டனை (இங்கிலாந்து) ரூ.8.75 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது. ராஷிக் சலாமை ரூ.6 கோடிக்கும் வாங்கியது.

குஜராத்: குஜராத் அணி ஜாஸ் பட்லரை (இங்கிலாந்து) ரூ.15.75 கோடிக்கும், முகமது சிராஜை ரூ.12.25 கோடிக்கும், காகிசோ ரபாடாவை (தென் ஆப்பிரிக்கா) ரூ.10.75கோடிக்கும், பிரசித் கிருஷ்ணாவை ரூ.9.5 கோடிக்கும் ஏலத்தில் வாங்கியுள்ளது. நிஷாந்த் சித்துவை ரூ.30 லட்சத்துக்கும் வாங்கியது.

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணி கே.எல். ராகுலை ரூ.14 கோடிக்கும், மிட்செல் ஸ்டார்க்கை (ஆஸ்திரேலியா) ரூ.11.75 கோடிக்கும், டி. நடராஜனை ரூ.10.75 கோடிக்கும், ஜேக் பிரேசர் – மெக்குர்க்கை (ஆஸ்திரேலியா) ரூ.9 கோடிக்கும், ஹாரி புரூக்கை (இங்கிலாந்து) 6.25 கோடிக்கும் வாங்கியது. சமீர் ரிஸ்வியை ரூ.95 லட்சத்துக்கும், கருண் நாயரை ரூ.50 லட்சத்துக்கும், அசுதோஷ் சர்மாவை ரூ.3.80 கோடிக்கும், மோகித் சர்மாவை ரூ.2.20 கோடிக்கும் வாங்கியது.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோப்ரா ஆர்ச்சரை (இங்கிலாந்து) ரூ.12.50 கோடிக்கு வாங்கியது. ஆகாஷ் மத்வால் ரூ.1.20 கோடிக்கும் வாங்கியது.

மும்பை: ட்ரென்ட் போல்ட்டை (நியூஸிலாந்து) ரூ.12.50 கோடிக்கும், நமன் திர்ரை ரூ.5.25 கோடிக்கும், ராபின் மின்ஸை ரூ.65 லட்சத்துக்கும் வாங்கியது.

சிஎஸ்கே: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) நிர்வாகம், ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மேலும், டேவன் கான்வேயை (நியூஸிலாந்து) ரூ.6.25 கோடிக்கும், கலீல் அகமதுவை ரூ.4.8 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை (நியூஸிலாந்து) ரூ.4 கோடிக்கும், ராகுல் திரிபாதியை ரூ.3.40 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது. நூர் அகமதுவை (ஆப்கானிஸ்தான்) ரூ.10 கோடிக்கும், விஜய் சங்கரை ரூ.1.20 கோடிக்கும் வாங்கியது.

அஸ்வின் 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். 2016-க்குப் பிறகு அவர் புனே, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் என பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது சிஎஸ்கே அணிக்கு அவர் திரும்பியுள்ளார்.

ஜெட்டா நகரில் ஐபிஎல் வீரர்களுக்கான திங்கள்கிழமையும் ஏலம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here