டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல உணவு விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டாய சேவைக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் உள்ளன. இவற்றில் 27 உணவகங்களுக்கு அந்த தொகையத் திருப்பித்தரக் கூறி மத்திய நுகர்வோர்ப் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி, மும்பை, பாட்னா உள்ளிட்ட நகரங்களின் பல உணவு விடுதிகளில் உணவருந்தியவர்களிடம் கூடுதலாகக் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோல், மொத்தம் 27 உணவு விடுதிகள் மீது மத்திய அரசாங்கத்தின் உதவி எண் மூலம் தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு புகார்கள் அனுப்பப்பட்டன.
இவை நுகர்வோர் புகார்களாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின்(சிசிபிஏ) விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சிசிபிஏ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மொத்தம், 27 உணவகங்களுக்கு எதிரான புகார்களைத் தாமாக முன்வந்து சிசிபிஏ வழக்குப் பதிவு செய்தது. காரணம், கட்டாய சேவைக் கட்டணம் வசூலிப்பது ஒரு நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வழக்கை விசாரித்த சிசிபிஏ, அந்த 27 உணவகங்களுக்கு தலா ரூ.30,000 அபராதம் விதித்துள்ளது. இத்துடன், வாடிக்கையாளர்களுக்கு சேவைக் கட்டணத் தொகையைத் திரும்ப அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கான பில்லிங் முறையை உடனடியாக மாற்றுமாறும் உத்தரவிட்டுள்ளது. இந்தப் புகார்களில் முக்கிய உணவகங்களாக, பிஹாரின் பாட்னாவில் உள்ள கஃபே ப்ளூ பாட்டில் மற்றும் மகராஷ்டிராவின் மும்பையில் உள்ள சைனா கேட் ரெஸ்டாரண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் போரா போரா உணவகங்களின் மூன்று கிளைகள் இடம் பெற்றிருந்தன.
இவற்றின் மீது, 2019 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 2(47)-இன் கீழ், வழக்குகள் பதிவாகின. நுகர்வோர் விவகாரத் துறையின்படி, பல உணவகங்கள் 2019 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சிசிபிஏ வழிகாட்டுதல்களை மீறும் வகையில் 10 சதவீத சேவைக் கட்டணத்தை வசூலித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பல உணவகங்கள் இயல்பாகவே 10 சதவீத சேவை வரியை வசூலித்து வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிசிபிஏவின் இந்த வழிகாட்டுதல்களான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ ஒரு வழக்கின் தீர்ப்பில் டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 28-ல் உறுதி செய்துள்ளது. எந்தவொரு உணவகமும் சேவை கட்டணத்தை தானாகவோ அல்லது இயல்பாகவோ சேர்க்கக்கூடாது என்று இந்த வழிகாட்டுதல்கள் அறிவுறுத்துகின்றன.
வேறு எந்தப் பெயரிலும் சேவை கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது எனவும், இதற்காக நுகர்வோரை கட்டாயப்படுத்தப்படக்கூடாது எனவும் சிசிபிஏவின் வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. மும்பையில் உள்ள ‘சைனா கேட் ரெஸ்டாரன்ட் பிரைவேட் லிமிடெட்’ (போரா போரா) வழக்கில், விசாரணை நடந்தபோதே சேவை கட்டணத்தைத் திருப்பி அளித்துவிட்டது.
கடந்த 1993 முதல் செயல்படும் சைனா கேட், டாப்-ரெஸ்டோ பார், போரா போரா, குளோபல் ஃபியூஷன், கேரவன் செராய், ரெட் பாக்ஸ் மற்றும் கோ-ஜியா-டிங் போன்ற பல பிராண்டுகளைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



