அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று அரச மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் சிறப்பு மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அதற்காக, ஏற்கெனவே அங்கு பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு கடந்த வாரம் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
ஆனால், மகப்பேறு துறையில் 57 மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருந்தும் கலந்தாய்வு நடத்தவில்லை. எனவே, கலந்தாய்வு நடத்தக் கோரி, மகப்பேறு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மகப்பேறு மருத்துவர்கள் கூறியதாவது: அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் நீண்டகாலமாக போதிய மருத்துவர்கள் இல்லாதபோதும், அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தாமல், தங்களைவருத்திக் கொண்டு பணியாற்றுகின்றனர்.
பேறுகால இறப்பு மற்றும் கைக்குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததில் மகப்பேறு மருத்துவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தினமும் நெடுந்தொலைவு சென்று, குடும்பம், குழந்தையைவிட்டு, மிகுந்த சிரமத்துடன் பணிபுரிவதால், மன உளைச்சலும், உடல் சோர்வும் ஏற்படுகிறது.
புதிதாக அரசு பணிக்கு வரும் மருத்துவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு, ஏற்கெனவே அரசு பணியில் இருக்கும் மூத்தவர்களான எங்களுக்கு மறுக்கப்படுவது என்ன நியாயம். எனவே, முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, மகப்பேறு மருத்துவர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தை பிரிவில் ‘டிஎம்’ படிப்பு படித்த உயர் சிறப்பு மருத்துவர் பணியிடங்களை உருவாக்குவதற்காக, ஏற்கெனவே இருக்கும் குழந்தைகள் நல மருத்துவர் பணியிடங்களை குறைப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியதாவது: ஏற்கெனவே தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவர் பணியிடங்களை அதிகரிப்பதற்கு மாறாக குறைப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
அதிலும் குறிப்பாக குழந்தைகள் நல மருத்துவர் பணியிடங்களை குறைப்பது பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, குழந்தைகள் நல மருத்துவர்பணியிடங்களை அதிகரிப்பதோடு, புதிதாக பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர் பணியிடங்களை உருவாக்குவது தான் ஏற்புடைவதாக இருக்கும். மேலும், குழந்தைகள் நல மருத்துவர்கள் பணியிடங்களை குறைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கூறினர்.



