இந்தியாவின் அதிகரித்து வரும் எல்என்ஜி எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யத் தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: வரும் 2040-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிவாயு தேவை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிசக்தி வல்லரசு என்ற முறையில் இந்தியாவின் அதிகரித்து வரும் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய கனடா தயாராக உள்ளது. உலகின் மிகக் குறைந்த கார்பன் வெளியேற்றம் கொண்ட மற்றும் நம்பகமான முறையில் உற்பத்தி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) வழங்க தயாராக உள்ளோம்.
ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் வெப்பமாக்கல், மின்சாரம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல், கத்தாரில் இருந்து வரும் எரிவாயு விநியோகத்தைப் பாதித்துள்ளதால், அதன் விலை உயர்ந்திருப்பதுடன், விநியோகத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
வரும் 2030-ம் ஆண்டு இறுதிக்குள் தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை 500 ஜிகாவாட்டாக அதிகரிக்கவும், தங்கள் நாட்டின் முதன்மை எரிசக்தி கலவையில் எல்என்ஜி-யின் பங்கை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு கனடா உறுதுணையாக இருக்கும்.
உற்பத்தி, தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி திட்டங்களுக்காக இந்தியா முக்கியமான தாதுப் பொருட்களைத் தேடும் வேளையில், கனடாவின் வளங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் ஒரு சிறந்த கூட்டாளியாக அமையும். உலகில் உள்ள சுரங்க நிறுவனங்களில் 40 சதவீதம் கனடாவில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி அல்லது யுரேனியம் என கனடா எதை வழங்கினாலும் வாங்க இந்தியா தயாராக இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. அதேநேரம், வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஒப்புதல் நடைமுறைகளை கனடா எளிதாக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈரான் – இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமை, ஹார்முஸ் ஜலசந்தி மூடல் மற்றும் எரிசக்தி விலை உயர்வு குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் ஆலோசித்த பிறகு, கார்னி இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். முன்னதாக திங்கள்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடனும் அவர் இது குறித்து விவாதித்திருந்தார்.














