அடுத்தடுத்து உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வரும் 7-ம் தேதி தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில், வரும் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு ரவி சாஸ்திரி கூறியதாவது: இந்திய அணி வீரர்களின் தனிப்பட்ட திறமை, தற்போதைய ஃபார்ம், போட்டிக்கான தகுதி, சமீப காலங்களில் அவர்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளின் அளவு ஆகியவை அவர்களைத் தெளிவான வெற்றி வாய்ப்புள்ள அணியாக மாற்றியுள்ளன.
குறிப்பாக, அவர்களின் முன்னணி பேட்டிங் வரிசையையும் அவர்கள் இருக்கும் சிறப்பான ஆட்ட நிலையையும் பார்க்கும்போது இது உறுதியாகிறது. எனவே, அடுத்தடுத்து உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது என்றே நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



