மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிகள் இருவரை, அங்கு பணியாற்றும் துப்புரவு தொழிலாளி அக் ஷய் ஷிண்டே என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றது. பெற்றோர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்திய பின் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தனர். பின் இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் என்கவுன்டரில் குற்றவாளி அக் ஷய் ஷிண்டே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ரேவதி மொஹிதி தேரே மற்றும் பிரித்திவிராஜ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பிரேந்திர சாரப், ‘‘காவல்துறை விசாரணை அறிக்கையில், ஒரு அதிகாரி கடமை தவறியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை காவல் ஆணையருக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது எப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.














