கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் அழகன்விளையை சேர்ந்தவர் ஆதிகேசவ பெருமாள், அரசு பஸ் டிரைவர். இவருடைய தங்கை ரெகுபதி, காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணமாகி கணவர் பிரிந்து சென்றார். இதையடுத்து தனிமையில் அவதிப்பட்டு வந்த ரெகுபதியை கவனித்துக் கொள்ளும் வகையில் ஆதிகேசவ பெருமாள் அதே பகுதியை சேர்ந்த தேவிகா (வயது 36) மற்றும் அவரது கணவர் ராகவன் (45) ஆகியோரிடம் பணம் கொடுத்துள்ளார்.
ஆனால் அவர்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை சரிவர கவனிக்கவில்லை. இந்தநிலையில் ரெகுபதி வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5½ பவுன் மாயமானது. தேவிகா-ராகவன் தம்பதி தங்கை வீட்டுக்கு வந்து சென்றதால் அவர்களிடம் நகைகள் மாயமானது பற்றி கேட்டுள்ளார். அவர்கள் சரியான பதில் கூறவில்லை.
இதுகுறித்து ஆதிகேசவ பெருமாள் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எட்வர்ட் பிரைட் விசாரணை நடத்தி தேவிகா-ராகவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.