டெல்லி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்கமாக வழங்கிய ரயில்வே

0
35

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரொக்கமாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.

மகா கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக்ராஜ் செல்வதற்காக கடந்த 15-ம் தேதி இரவு புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் ரயில்களுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு ரயிலில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஏற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 10 பெண்கள், 4 சிறுமிகள், 4 ஆண்கள் என மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்திருந்தது.

கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன்பிறகு அந்த மருத்துவமனை வளாகத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்தை ரயில்வே அதிகாரிகள் ரொக்கமாக வழங்கினர்.

கூட்ட நெரிசலில் காயமடைந்த 15 பேர் ஆர்எம்எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலத்த காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ.2.5 லட்சத்தையும் லேசான காயமடைந்த 12 பேருக்கு தலா ரூ.1 லட்சத்தையும் ரயில்வே அதிகாரிகள் ரொக்கமாக வழங்கினர்.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 15-ம் தேதி இரவில் புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 18 பேரின் உடல்கள் அன்று நள்ளிரவில் ஆர்எம்எல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 16-ம் தேதி அதிகாலையில் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. அப்போது தலா ரூ.10 லட்சம் இழப்பீடு ரொக்கமாக வழங்கப்பட்டது. கடந்த 16-ம் தேதியே காயமடைந்தவர்களும் ரொக்கமாக இழப்பீடு வழங்கப்பட்டது. காசோலை, ஆன்லைன், வங்கி நடைமுறைகளின்படி இழப்பீட்டை பெற காலதாமதம் ஏற்படும். இதை தவிர்க்க ரொக்கமாக இழப்பீட்டை வழங்கினோம். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறியதாவது: கடந்த 16-ம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் 3 ரயில்வே அதிகாரிகள் எங்களை சந்தித்தனர். ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை கேட்டு பெற்றனர். ஆவண சரிபார்ப்பு மற்றும் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்ற பிறகு தலா ரூ.10 லட்சத்தை ரொக்கமாக வழங்கினர்.

உடல்களை வீடுகளுக்கு கொண்டு செல்ல ரயில்வே சார்பில் ஆம்புலன்ஸ் வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. பாதுகாப்புக்காக ஆர்பிஎப் போலீஸ்காரர் ஒருவரும் உடன் வந்தார். இவ்வாறு உறவினர்கள் தெரிவித்தனர்.

கூட்ட நெரிசலில் 19 வயது மகள் பேபி குமாரியை இழந்த தந்தை பிரபு கூறியதாவது: நான் பிஹாரை சேர்ந்தவன். எனது மகள் பிளஸ் 2 வரை படித்துவிட்டு வேலை தேடி டெல்லிக்கு வந்தார். புதுடெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்துவிட்டார். டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் மகளின் உடலை வாங்க வந்தேன். ரயில்வே அதிகாரிகள் என்னிடம் ஆவணங்களை பெற்றுக் கொண்டு ரூ.10 லட்சம் ரொக்கத்தை வழங்கினர். ஊடகங்களில் பேட்டி கொடுக்கக்கூடாது என்று கண்டிப்புடன் அறிவுறுத்தினர். மகளின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியை ஏற்பாடு செய்து தந்தனர். ஆர்பிஎப் போலீஸ்காரர் ஒருவரும் பிஹார் வரை உடன் வந்தார். இவ்வாறு பிரபு தெரிவித்தார்.

கூட்ட நெரிசலில் காயமடைந்த அமர்ஜித் பாஸ்வான் கூறியதாவது: நான், எனது மனைவி ரேகா தேவி, எனது அண்ணனின் 12 வயது மகன் நீரஜ் குமார் ஆகியோர் மகா கும்பமேளா செல்ல புதுடெல்லி ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். கூட்ட நெரிசலில் எனது அண்ணன் மகன் நீரஜ் குமார் உயிரிழந்து விட்டார். நானும் எனது மனைவியும் காயங்களுடன் உயிர்தப்பினோம். ரயில்வே அதிகாரிகள் எங்களை சந்தித்து தலா ரூ.1 லட்சத்தை இழப்பீடாக வழங்கினர். எனது அண்ணன் மகன் நீரஜ் குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக அளித்தனர். எங்கள் வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையை பார்த்தது கிடையாது. இவ்வாறு அமர்ஜித் பாஸ்வான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here