தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் செப்டம்பர் 24-ம் தேதி டர்பன் நகரில் தொடங்குகிறது.
இந்நிலையில் ரபாடாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தொடையில் காயம் ஏற்பட்டது. அவர், முழு உடற்தகுதியைப் பெறுவதற்கு குறைந்தது நான்கரை வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காகிசோ ரபாடாவுக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மீள்வதற்காக அவர், மருத்துவக் குழுவின் தீவிர மேற்பார்வையில் தொடக்கக்கட்ட மறுவாழ்வு பயிற்சியை பெற்று வருகிறார்.
இதனால் வரும் செப்டம்பர் 24 முதல் 30 வரை நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் ரபாடா கலந்துகொள்ளமாட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர், பங்கேற்பது, உடற்தகுதியை பொறுத்தே அமையும். டெஸ்ட் தொடர் நெருங்கும் போது இது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
