பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் லாட்டரியில் ரூ.12 கோடி வென்றார். பஞ்சாப் மாநிலம் டேராபஸ்ஸி அருகே உள்ள ஹுமாயுன்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பல்ஜிந்தர் சிங். இவர், கடந்த 2010-ம் ஆண்டு முதல் லாட்டரி டிக்கெட்களை வாங்கி வந்தார்.
ஆனால் அவருக்கு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை. என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து லாட்டரி டிக்கெட்களை வாங்கி் வந்தார். தீபாவளியையொட்டி பஞ்சாப் மாநில டியர் தீபாவளி பம்பர் லாட்டரி 2026-ன் கீழ் விற்பனை செய்யப்பட்ட 500 ரூபாய் லட்டாரி டிக்கெட்டை வாங்கினார்.
அதன் குலுக்கல் முடிவுகள் கடந்த திங்கள் மாலை அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசான ரூ.12 கோடியை பல்ஜிந்தர் சிங் வென்றார். இந்தப் பரிசு பல்ஜிந்தர் சிங் மற்றும் அவரது குடும்பத்தினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வெற்றியை அறிந்ததும் அவர் ஜிராக்பூரில் உள்ள லாட்டரி அலுவலகத்துக்குச் சென்று, பரிசுத் தொகையைப் பெறுவதற்கான நடைமுறைகளை முடித்தார்.
இதனிடையே, பல்ஜிந்தர் சிங் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு வென்ற செய்தி அவரது கிராமத்தில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, அங்கு கொண்டாட்டங்கள் தொடங்கின. கிராம மக்கள் அவரது வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு வாழ்த்துத் தெரிவித்து, இனிப்புகளையும் வழங்கினர்.
முன்னதாக, லாட்டரி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பல்ஜிந்தர் சிங், “இறுதியாக, கடவுள் என் பிரார்த்தனைகளுக்குப் பதிலளித்துவிட்டார். அவருக்கு எனது நன்றி” என தெரிவித்தார். பரிசுத் தொகையை எவ்வாறு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளீர்கள் என்று கேட்டதற்கு, தனது இரண்டு பிள்ளைகளின் கல்விக்காகக் கணிசமான தொகையைச் செலவிடுவேன் என்று கூறினார்.
