உத்தர பிரதேசத்தில் உறவினர்களை வழியனுப்புவதற்காக சென்றவர்கள் வந்தே பாரத் விரைவு ரயிலில் 140 கிலோ மீட்டர் தூரம் பயணித்த 12 பேருக்கு ரயில்வே நிர்வாகம் ரூ.36,000 அபராதம் விதித்து உள்ளது.
வாராணசி – புதுடெல்லி வந்தே பாரத் விரைவு ரயில் (வண்டி எண்: 22415) ஞாயிற்றுக்கிழமை காலை கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தது. கான்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 பேர், ரயிலில் பயணம் செய்யவிருந்த தங்களது குடும்பத்தினரின் உடைமைகளை வைத்து, அவர்களை இருக்கைகளில் அமர வைப்பதற்காக ரயிலுக்குள் ஏறியுள்ளனர்.
உறவினர்கள் அதிர்ச்சி
அப்போது அவர்கள் உள்ளே இருந்தபோதே, புறப்படும் நேரம் நெருங்கியதால் ரயிலின் தானியங்கி கதவுகள் தானாகவே மூடிக்கொண்டன. அடுத்த ரயில் நிலையம் வரும் வரை இக்கதவுகள் திறக்காது என்பதால், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அந்த 12 பேரும் ரயிலுக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். ரயில் புறப்பட்டுச் சென்றதைக் கண்டு நடைமேடையில் நின்றிருந்த மற்ற உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரயிலுக்குள் சிக்கியவர்கள் உடனடியாகக் கதவுகளைத் திறக்குமாறு ரயில்வே ஊழியர்களிடம் முறையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், ஓடும் ரயிலில் பாதுகாப்பு விதிகள் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் காரணமாகக் கதவுகளைத் திறக்க முடியாது என ஊழியர்கள் கைவிரித்தனர். பின்னர் இதுகுறித்து துண்ட்லா ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறையின் உத்தரவைத் தொடர்ந்து, கான்பூரிலிருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இட்டாவா சந்திப்பில் காலை 10.49 மணியளவில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது.
அங்கு தயாராக இருந்த இட்டாவா நிலைய கண்காணிப்பாளர் பி.எம். மீனா, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் தினேஷ் குமார் சிங் மற்றும் ரயில்வே காவல் துறை ஆய்வாளர் யதுவீர் சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் 12 பேரையும் பத்திரமாக ரயிலில் இருந்து கீழே இறக்கினர். அதன் பின்னர் ஆர்.பி.எஃப். காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
முறையான பயணச்சீட்டோ, அனுமதியோ இன்றி ரயிலுக்குள் ஏறி விதிமீறலில் ஈடுபட்டதற்காக, வணிகப் பிரிவு அதிகாரிகள் நபர் ஒருவருக்கு தலா ரூ.3,000 வீதம் மொத்தம் ரூ.36,000 அபராதம் வசூலித்தனர். எதிர்காலத்தில் இதுபோன்று அனுமதியின்றி ரயில்களில் ஏறக் கூடாது என எச்சரிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ரயில் ஏறக்கூடாது
வந்தே பாரத் போன்ற நவீன ரயில்களில் பயணம் செய்யும்போது, வழியனுப்ப வருபவர்கள் ரயிலுக்குள் ஏறுவதைத் தவிர்த்து நடைமேடையிலேயே நிற்க வேண்டும் என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை பொதுமக்களுக்கு உணர்த்தியுள்ளது.
