Home விளையாட்டு செய்திகள் ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் 4 டிக்கெட் வழங்குக: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் கோரிக்கை | IPL 2026

ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் 4 டிக்கெட் வழங்குக: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் கோரிக்கை | IPL 2026

0

ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த சூழலில் இந்த சீசனை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 4 மேட்ச் டிக்கெட்டுகள் வழங்குமாறு கர்நாடக அரசுக்கு சபாநாயகர் அறிவுறுத்தி உள்ளார்.

ஐபிஎல் டிக்கெட் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் மீது பல்வேறு கட்சிகளை சேர்ந்த கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த சூழலில் அம்மாநில சபாநாயகரான யு.டி.காதர் இதை தெரிவித்துள்ளார்.

இந்த சீசனில் முதல் ஆட்டம் பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில், ஐபிஎல் டிக்கெட் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா பேசினார். பெங்களூரு நகரத்தின் வளர்ச்சி தொடர்பான விவாதத்தின் போது அவர் இதனை பேசினார். “மாநில கிரிக்கெட் நிர்வாகத்துக்கு 16.32 ஏக்கர் நிலத்தை மிகக்குறைந்த விலையில் குத்தகைக்கு விட்டுள்ளது. இருப்பினும் ஒவ்வொரு முறையும் போட்டியின் போது நாம் டிக்கெட்டுகள் கேட்டு அவர்களை மன்றாட வேண்டி உள்ளது. அப்படியே டிக்கெட் கிடைத்தாலும் அதன் விலை அதிகமாக உள்ளது. ஆனால், மாநில கிரிக்கெட் நிர்வாகம் இதன் மூலம் அதிகளவு வருவாய் ஈட்டுகிறது” என அசோகா சுட்டிக்காட்டினார்.

இதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் விஜயானந்தா ஆதரவு தெரிவித்தார். மேலும், ஆன்லைன் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீருவது குறித்தும், கள்ள சந்தையில் ஐபிஎல் டிக்கெட் கிடைப்பது குறித்தும் பேரவை உறுப்பினர்கள் பேசினர்.

இதைத்தொடர்ந்து மாநில கிரிக்கெட் சங்கத்துடன் பேசி, ஒவ்வொரு உறுப்பினருக்கும் நான்கு ஐபிஎல் டிக்கெட்டுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் சபாநாயகரான யு.டி.காதர் கேட்டுக் கொண்டார். அதையேற்றுக் கொண்ட டி.கே.சிவக்குமார், நிச்சயம் இது குறித்து கிரிக்கெட் சங்க தலைவருடன் பேசுவதாக உறுதி அளித்தார். மேலும், உறுப்பினர்களின் கோரிக்கையில் தவறு இல்லை என்றும் அவர் கூறியதாக தகவல்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி விளையாடும் லீக் போட்டிகளில் 5 ஆட்டங்கள் மட்டுமே பெங்களூருவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version