சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-1-ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபாலிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் நேற்று சமர்ப்பித்தார்.
மெட்ரோ ரயில் மற்றும் மேம்பாலச் சாலையின் ஒருங்கிணைந்த கட்டுமானத்தை வழங்குவதற்காக, தமிழக அரசுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை திருத்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின் படி, மெட்ரோ வழித்தடம் நிலை 2-ல் மற்றும் மேம்பாலச் சாலை நிலை-1-ல் முன்மொழியப்பட்டுள்ளது. இது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு தடையற்ற சாலை போக்குவரத்து மற்றும் மெட்ரோ இணைப்பை வழங்கும்.
முன்மொழியப்பட்ட நீட்டிப்பு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் வழியாகச் செல்லும். இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கும். மேலும், இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 15.46 கி.மீட்டர் ஆகும். உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 13. மதிப்பீட்டு செலவு ரூ.9,335 கோடியாகும்.