நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர், போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவர் மீது, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஸ்டீபன் ராஜை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டீபன் ராஜுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை வார்டுக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரிடம் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என ஸ்டீபன் ராஜ் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது போலீசாரின் கண்காணிப்பில் இருந்து திடீரென ஸ்டீபன் ராஜ் தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கும் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
