Home தேசிய செய்திகள் இந்தோனேசியாவின் பிரம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

இந்தோனேசியாவின் பிரம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

0

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலுக்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள சிவாலயத்தில் வழிபாடு மேற்கொண்டார்.

மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஜூலை 6) இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான இன்று யோக்யகர்த்தா நகரில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலுக்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் சென்றார்.

இந்தோனேசியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான கமலன் இசைக் குழுவின் இன்னிசை மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதனமான இக்கோயில் வளாகத்தைச் சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி, அங்குள்ள பிரதான சிவபெருமான் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற பிரார்த்தனையிலும் அவர் பங்கேற்றார்.

கோயில் வளாகத்தில் உள்ள நுணுக்கமான சிற்பங்களைக் கண்ட பிரதமர் மோடி மற்றும் அதிபர் பிரபோவோ சுபியான்டோ, அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளைப் பார்வையிட்டனர்.

இந்தோனேசிய அதிபருடன் இந்திய பிரதமர்

இதையடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘இந்தியா – இந்தோனேசியா இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான நாகரிக தொடர்பின் அடையாளமாக பிரம்பனன் கோயில் திகழ்வதாக அதிபர் பிரபோவோ சுபியான்டோ குறிப்பிட்டார்.

கோயில் வளாகத்தை சீரமைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இரு நாடுகளையும் இணைக்கும் கலாச்சார பாலமாக இக்கோயில் தொடர்ந்து விளங்கி வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தனது இந்தப் பயணம் ஆழ்ந்த ஆன்மிகம் கொண்டதாகவும் மறக்க முடியாத அனுபவமாகவும் இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஏறக்குறைய பன்னிரெண்டு நூற்றாண்டுகளாக இந்த அற்புதமான பாரம்பரியத்தைப் பாதுகாத்து வரும் இந்தோனேசிய மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இக்கோயிலை பாதுகாக்கும் பணியில் இந்தியாவின் பங்கேற்பு, இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மரபைப் பிரதிபலிப்பதாகவும், இந்த சீரமைப்புத் திட்டம் மக்கள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்தோனேசியாவுக்கான தனது மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தின்போது அளிக்கப்பட்ட சிறப்பான உபசரிப்புக்காக அதிபர் பிரபோவோவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குப் புறப்பட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version