இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு மரக்கன்றை பரிசளித்த பிரதமர் மோடி: ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ இயக்கம்!

0
103

இங்கிலாந்துக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸை சந்தித்தார். அப்போது மன்னர் சார்லஸுக்கு மரக்கன்று ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்தார்.

முன்னதாக, வியாக்கிழமை அன்று இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மெரை சந்தித்தார் பிரதமர் மோடி. அந்த சந்திப்பின் போது அவர்கள் முன்னிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து மன்னர் சார்லஸை சந்தித்தார். இந்த சந்திப்பு மன்னரின் அதிகாரப்பூர்வ வசிப்பிடங்களில் ஒன்றான சாண்ட்ரிங்ஹாம் ஹவுஸில் நடைபெற்றது.

அப்போது மன்னர் சார்லஸுக்கு பிரதமர் மோடி ‘சோனோமோ’ மரக்கன்று ஒன்றை பரிசாக வழங்கினார். விரைவில் இந்த மரக்கன்றை மன்னர் சார்லஸ் நடவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து அரச குடும்பத்தின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சாண்ட்ரிங்ஹாம் ஹவுஸில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மன்னர் வரவேற்றார். அப்போது பிரதமர் மோடியின் சுற்றுச்சூழல் இயக்க முயற்சியான ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ இயக்கத்தின் அடையாளமாக மன்னர் சார்லஸுக்கு மரக்கன்று பரிசாக வழங்கப்பட்டது. அன்னையை போற்றும் வகையில் இந்த மரம் நடும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என சமூக வலைதள பதிவில் அரச குடும்பம் தெரிவித்துள்ளது.

“மன்னர் சார்லஸ் உடனான இந்த சந்திப்பு அருமையானது. இந்தியா – இங்கிலாந்து இடையிலான உறவு குறித்து விவாதித்தோம். கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினோம். ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ இயக்கத்தில் மன்னர் சார்லஸ் இணைவது உலக அளவில் பலரையும் ஈர்க்கும். இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மீது மன்னர் சார்லஸ் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சூழல் பாதுகாப்பு குறித்தும் பேசினோம்” என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

‘தாயின் பெயரில் ஒரு மரம்’ இயக்கம்: கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி (ஜூன் 5) பிரதமர் நரேந்திர மோடி ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றை பிரதமர் மோடி நட்டார். நமது புவியின் நலனுக்காக அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றும் அப்போது தெரிவித்தார். மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் இதை பிரதமர் மோடி அப்போது பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here