மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 17-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் கணபதி பூஜை, நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு தொடர் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
இதற்காக நேற்று பிற்பகலில் இருந்தே பக்தர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்ததால் குறைவான பக்தர்களே நேற்று சுவாமி தரிசனத்துக்கு வந்திருந்தனர். இதனால் பம்பை, அப்பாச்சிமேடு, நடைப்பந்தல் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிச் காணப்பட்டன.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று மாலை திருவனந்தபுரம் வந்தார். இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வந்து, அங்கிருந்து கார் மூலம் பம்பை வருகிறார்.
அங்கு நதியில் நீராடி, கணபதி கோயிலில் இருமுடி கட்டி ஜீப் மூலம் சபரிமலை செல்ல உள்ளார். பிற்பகல் ஒரு மணியளவில் அவர் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக நேற்று ஜீப்களை இயக்கி முன்னோட்டம் பார்க்கப்பட்டது.
மேலும், பம்பை, நிலக்கல், சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இன்று இரவு கோயில் நடை சாத்தப்பட உள்ளது.