இந்தியாவைச் சேர்ந்த காமினி கண்ணன் 23 ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.
ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மீண்டும் துபாய் சென்றிருந்தார். தனது மகன் அபிமன்யு வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தங்க நாணயங்கள் கொண்ட பை பழையதாகிவிட்டதால், அதை வேறு ஒரு பையில் மாற்றி டைனிங் டேபிளில் வைத்தார். அந்தப் பையில் தலா 8 கிராம் எடையுள்ள நான்கு 22 காரட் தங்க நாணயங்கள் மற்றும் ஒரு 50 கிராம் 24 காரட் தங்கக் கட்டி ஆகியவை இருந்தன.
மறுநாள் காலை (பிப்ரவரி 1) காமினி இந்தியா திரும்ப வேண்டிய நிலையில், தங்கம் வைத்திருந்த பை காணாவில்லை. விசாரித்த போது அவரது மகன் தவறுதலாக அந்தப் பையைக் குப்பையில் வீசியது நினைவுக்கு வந்தது. குப்பையில் போனால் போனதுதான் என்று கருதி, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கூட அளிக்கவில்லை.
ஆனால், பிப்ரவரி 4ம் தேதி அபிமன்யு வசிக்கும் கட்டிடத்தின் காவலாளி மூலம் அவரை போலீஸார் தொடர்பு கொண்டனர். குப்பை சேகரிக்கும் தொழிலாளி ஒருவர் தங்கத்தைக் கண்டெடுத்து, அதை விற்க முயன்றுள்ளார். அங்கு அதிகாரிகள் விசாரித்த போது, அது குப்பையில் கிடைத்தது தெரிய வந்துள்ளது. அன்று மாலை அபிமன்யு காவல் நிலையத்துக்குச் சென்று, புகைப்படங்கள் மற்றும் வாங்கியதற்கான ரசீதுகளைச் சமர்ப்பித்தார்.
சில மணி நேர நடைமுறைகளுக்குப் பிறகு தங்கம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ”துபாயில் குப்பைகளைக் கண்காணிக்க தனி அமைப்பு உள்ளது. எந்தப் பை எந்த இடத்தில் இருந்து வருகிறது என்பதை அவர்களால் துல்லியமாகக் கண்டறிய முடியும்” என்று அபிமன்யு வியப்புடன் தெரிவித்தார்.



