கோவை மருத்துவ தம்பதிகளான சகுபர் சாதிக் – ஹஸ்மத் பர்சானா, தங்கள் மருத்துவமனையை அடமானமாக வைத்து எல்ஐசி வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் கடன் பெற்னர்.
கரோனா காலகட்டத்தில் நிதி நெருக்கடியால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஒரே தவணையாக ரூ.4 கோடி செலுத்துவதாக பேசி முடிவு செய்தனர்.
அந்த தொகையை எல்ஐசி நிதி நிறுவனத்தில் செலுத்தி பத்திரத்தை மீட்டு ரெப்கோ வங்கியில் கூடுதல் கடன் பெறும் நோக்கில், தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திகா கனகராஜ், மகாராஜா ஆகியோரிடம் இருந்து ரூ.3.94 கோடியை வட்டிக்கு கடனாகப் பெற்றனர். ரூ.2.43 கோடியை எல்ஐசிக்கு செலுத்திவிட்டு, மீதியை ஜூலை 30-க்குள் செலுத்த அவகாசம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், கூடுதலாக கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சம்பந்தப்பட்ட பைனான்சியர்கள் மீது கோவை ஆர்.எஸ். புரம் காவல் ஆய்வாளரிடம் மருத்துவ தம்பதியர் புகார் கொடுத்தனர். இந்த நிலையில், அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல், தங்கள் வங்கிக் கணக்கை போலீஸார் முடக்கி யுள்ளதாக குற்றம்சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ தம்பதியர் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, வழக்கறிஞர் எஸ்.உதயகுமார் ஆகியோர், “புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்தவர்களின் வங்கிக் கணக்கையே போலீஸார் முடக்கியது ஒருதலைபட்சமானது.
ஆன்லைன் மோசடி புகார்கள் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்கும் அதிகாரம் போலீஸாருக்கு இல்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அடிப்படையில் டிஜிபி ஏற்கெனவே சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்” என்றனர்.
இதையடுத்து நீதிபதி, ‘‘ஆன்லைன் மோசடி தவிர்த்து வேறு எந்த காரணத்துக்காகவும் எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்க போலீஸாருக்கு அதிகாரமில்லை. பணத்தை மோசடி செய்ததாக மனுதாரர்கள் மீது பைனான்சியர்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை.
எனவே, வங்கிக் கணக்கு முடக்கத்தை வங்கி நிர்வாகம் உடனே நீக்க வேண்டும். மனுதாரர்கள் தங்களிடம் உள்ள தொகையைக் கொண்டு எல்ஐசியில் வாங்கிய கடனை பைசல் செய்ய வேண்டும். பின்னர் ரெப்கோ வங்கியில் கடன் பெற்று தனியார் பைனான்சியர்களின் கடனை பைசல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.















