எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு முதலில் 25 சதவீத வரி விதித்தது. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம் சாட்டி கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இந்திய பொருட்களுக்கு மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வருகிறது.
அமெரிக்க அரசின் வரி விதிப்பு தொடர்பாக இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க வர்த்தகத் துறை மூத்த அதிகாரி ரிக் ஸ்விட்சர் தலைமையிலான குழு சில நாட்களுக்கு முன்பு டெல்லி வந்தது. அமெரிக்க குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு கடந்த 10, 11-ம் தேதிகளில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பயோ எரிபொருள் உற்பத்திக்காக அமெரிக்காவில் இருந்து சோயா பீனை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
“வரிவிதிப்பு குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக குழுவினரை சந்தித்து பேச உள்ளேன்’’ என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று தெரிவித்தார். மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் நேற்று கூறும்போது, “வரிவிதிப்பு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே பெரும்பாலான கருத்து வேறுபாடுகள் களையப்பட்டுள்ளன. வரும் மார்ச் மாதத்துக்குள் இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும்’’ என்று தெரிவித்தார்.
இந்த சூழலில், பிரதமர் மோடி,அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில்,‘அதிபர் ட்ரம்ப் உடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினேன். இருதரப்பு, பிராந்திய, சர்வதேச நிலவரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினோம். சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை, செழுமைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் விருப்பம் தெரிவித்தனர். எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
ராணுவம், வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற ஏற்கெனவே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்தும்கூட, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு இந்தியா அடிபணியவில்லை. சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ட்ரம்பின் தவறான வெளியுறவு கொள்கைகளால் இந்தியா அணி மாறுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து இந்தியா உடனான வர்த்தக பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மென்மையான போக்கை கடைபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்துப் பேசியது முக்கியத்துவம் பெறுகிறது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







