கேரள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல் முறையாக பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:
“கேரளாவில் 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களம் கண்ட இடதுசாரி முன்னணிக்கு இந்தத் தேர்தல் முடிவு முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இந்த தோல்வி முழு வியப்பையும் பேரதிர்ச்சியையும் அளித்துள்ளது. தேர்தல் பின்னடைவை ஒப்புக்கொண்டு மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
சட்டமன்றத்தில் இடதுசாரி முன்னணி ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படும். சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துமாறு புதிய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். கேரள சட்டப் பேரவையில் பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைத்துள்ளது. கேரள தேர்தல் களத்தில் இடம்பிடிக்கப் போராடி வந்த பா.ஜ.க., தற்போது தடம் பதித்து வருவது கவலையை தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் கடந்த பத்தாண்டுகளாக பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வந்த இடதுசாரி முன்னணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) இம்முறை ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
