சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: விரைவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

0
370

ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லியில் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொருரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும். இதில் முதல் கட்டமாக, 36 ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது. இந்த வகையைச் சேர்ந்த முதல் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் கடந்த பிப்.8-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் செப்டம்பர் 22-ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து, சோதனை தடத்துக்கு இந்த ரயில்மாற்றப்பட்டது.

அங்கு பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ரயில் சென்னைக்கு அக்டோபரில் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் கடந்த மாதம் 3-வதுவாரத்தில் சென்னையை வந்தடைந்தது. இந்நிலையில், இந்த ரயிலின் முதல் சோதனை ஓட்டம் பூந்தமல்லியில் விரைவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் தயாரிக்கப்பட்ட பிறகு, அல்ஸ்டாம் தொழிற்சாலை வளாகத்தில் அனைத்து சோதனைகளும் முடித்து, சென்னையை வந்தடைந்தது. இந்த ரயிலின் சோதனைஓட்டம் விரைவில் பூந்தமல்லியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பூந்தமல்லி பணிமனையை தயார் செய்யும் பணி நடைபெறுகிறது.

சோதனை ஓட்டம் மேற்கொள்ள மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையிடம் அனுமதி கேட்டு இருக்கிறோம். அவர்களின் அனுமதி கிடைத்தவுடன் சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஏற்கெனவே, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம், இந்தரயிலின் அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்து உள்ளனர்.அதுபோல, இங்கும் பல்வேறு சோதனைகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு, 2-ம்கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பல்வேறு சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும். பின்னர்,சட்டப்பூர்வ ஒப்புதலுக்கு பிறகு,வழக்கமான சேவையை தொடங்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ் இடையே 4-வது வழித்தடம் அமைகிறது. இதில் பூந்தமல்லி – கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை உயர்மட்ட பாதை அமைக்கப்படுகிறது. இங்கு பூந்தமல்லி – போரூர் இடையே அடுத்த ஆண்டு நவம்பரில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்த தடத்தில்தான் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் முதன்முதலாக இயக்கப்பட உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here