குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை கோரும் மனு குறித்து மத்திய அரசு, தலைமை தேர்தல் ஆணையம் 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எம்பி, எம்எல்ஏக்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவர். அவர்களின் தண்டனை காலம் முடிந்து விடுதலையான நாள் முதல் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
இந்த சூழலில் குற்றவியல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்படுவோர் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ் வழக்கு நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மன்மோகன் அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
தேச நலன் சார்ந்த இந்த வழக்கில் சிறப்பு ஆலோசகராக மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கூறியதாவது: நாடு முழுவதும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது 5,000-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் வழக்குகளின் விசாரணையில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது.
தற்போதைய மக்களவையில் சுமார் 42 சதவீத எம்பிக்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளின் விசாரணை விரைவாக நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவது அவசியம். இவ்வாறு வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தெரிவித்தார்.
மனுதாரர் அஸ்வினி உபாத்யாயா சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜரானார். அவர் கூறியதாவது: எம்பிக்கள், எம்எல்ஏக்களில் சுமார் 46 சதவீதம் பேர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற வழக்குகளில் சிலர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாலும் குறைந்தபட்ச தண்டனையே வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 ஆண்டுகளில் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு செல்கின்றனர். இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க குற்றவியல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்படுவோர் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கப்பட வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிட்டார்.
இந்த வழக்கில் பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் காலஅவகாசம் கோரப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது:
எம்பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை மந்தமாக நடைபெறுவது கவலையளிக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இன்னமும் எம்பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றங்களே அமைக்கப்படாதது வேதனையானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவியல் வழக்கில் சிக்கும் ஓர் அரசு ஊழியர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அந்த ஊழியருக்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது. அவர் அரசு பணியில் மீண்டும் சேரவே முடியாது. ஆனால் குற்றவியல் வழக்குகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படும் அரசியல் தலைவர்கள், 6 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு செல்கின்றனர். சட்டத்தை மீறி செயல்பட்டவர்கள், சட்டத்தை வரையறுப்பது நியாயமா என்ற கேள்வி எழுகிறது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் 3 வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 4-ம் தேதி நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.














