காவல் துறையில் 2-ம் நிலை காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் தளர்த்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.கலீல் பாஷா, செயலாளர் ஜி.வி.திருக்குமரன் ஆகியோர் உள்துறைச் செயலர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல்துறையில் 2-ம் நிலை காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் தயாராகி வருகின்றனர்.
தற்போது 2-ம் நிலை காவலர் பதவிக்கு வயது வரம்பு 26 ஆகவும், உதவி ஆய்வாளர் தேர்வுக்கு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டும் 2 ஆண்டுகள் வயது வரம்பு தளர்த்தப்படுகிறது.
கடந்த 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படவில்லை. இதனால், காவல்துறையில் சேரும் லட்சியத்தில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் வயது வரம்பைக் கடந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையில் சேர அதிகபட்ச வயது வரம்பு கேரளத்தில் 31 ஆகவும், தெலங்கானா, கர்நாடகாவில் 32 ஆகவும், குஜராத்தில் 35 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் 33 ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் சீருடைப் பணியாளர் தேர்வுகள் நடத்தப்படாததால் 2-ம் நிலை காவலர், உதவி ஆய்வாளர் தேர்வுக்கான வயது வரம்பை அனைத்து பிரிவினருக்கும் 5 ஆண்டுகள் தளர்த்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.














