சென்னை, புறநகர் கடைவீதிகளில் குவிந்த மக்கள்: ஜவுளி, கரும்பு, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அமோகம்

0
44

பொங்கல் விழா நாளை (ஜன.14-ம் தேதி) கொண்டாடப்பட இருக்கும் நிலையில், விடுமுறை நாளான நேற்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

வட சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை எம்சி சாலையில் உள்ள துணிக் கடைகளில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து, அவர்களின் விருப்பத்தை கேட்டு புத்தாடைகளை வாங்கிச் சென்றனர். வடசென்னையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்ட கிராமப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வந்திருந்தனர். அப்பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது.

புரசைவாக்கம் நெடுஞ்சாலை, தானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று லேசான சாரல் மழை பெய்த நிலையிலும், மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போகி தினத்துக்கான மேளம், பொங்கலுக்காக பானை, கரும்பு போன்றவற்றை மக்கள் வாங்கிச் சென்றனர். ஜவுளிக் கடைகளில் புத்தாடைகள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். நாளை பொங்கல் என்பதால் இன்றும் கூட்டம் அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தையில் கரும்பு,
மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், தி.நகர் உஸ்மான்சாலையில் பனகல் பூங்கா சந்தை, பாண்டிபஜார் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். குறிப்பாக, தி.நகர் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இங்குள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் புதிய ஆடைகளும், வீட்டுக்கு தேவையான, வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்களையும் மக்கள் வாங்கி சென்றனர். பொதுமக்கள் கூட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக, போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாம்பரம் தினசரி மார்க்கெட்டில் கரும்பு, மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவை விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த ஆண்டு 15 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் ரூ.150 முதல் ரூ.200 வரைக்கும், வாழைத்தார் பெரிய ரகம் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும், மண் பானை, விறகு அடுப்பு, கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஜவுளி கடைகளில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாகவும், 45 சதவீதம் அதிகமாகவும் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ஆட்டு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் குரோம்பேட்டையில் உள்ள ஜவுளி மற்றும் நகை கடைகளுக்கு கூட்டம் அலை மோதியது. பொங்கல் விழாவை முன்னிட்டில், நேற்று சென்னை, புறநகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடை வீதிகள் அதிகம் இருக்கும் பல பகுதிகளில், நேற்று பகல் நேரங்களில் ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு போலீஸார் கயிறுகளை கட்டியும், தடுப்புகள் அமைத்தும் அமைத்தும் தடை விதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here