பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ‘குல் ஷாப்பிங் பிளாசா’ என்ற வணிக வளாகத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 36 மணி நேர போராட்டத்துக்குப் பின், தீயணைப்பு படையினர் தீயை முற்றிலும் அணைத்தனர்.
அங்கு உடல்களை சேகரிக்கும் பணிகள் நடந்து வந்தன. இதுவரை மொத்தம் 61 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவற்றில் 11 பேரின் உடல்களை மட்டுமே அடையாளம் காண முடிந்தது.
50 உடல்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி இருந்தன. அவர்களை அடையாளம் காண, காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 50 பேரிடம் டிஎன்ஏ மாதிரிகளை பாகிஸ்தான் அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த தீ விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு மீட்புப் பணிகள் முற்றிலும் முடிவடைய இன்னும் 10 முதல் 15 நாட்கள் ஆகும் என கராச்சி தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.



