இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை கடத்திய பாகிஸ்தான் மதத் தலைவர் முப்தி சுட்டுக் கொலை

0
160

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை கடத்திய பாகிஸ்தான் மதத் தலைவர் முப்தி ஷா மிர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பணி ஓய்வுக்குப் பிறகு ஈரான் நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். தலிபான் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் மதத் தலைவர் முப்தி ஷா மிர் ஆகியோரின் உதவியுடன் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச்சில் அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குல்பூஷண் ஜாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரலில் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து இந்தியா சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலையில் தீர்ப்பு வழங்கியது. குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம், பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. இதன்படி அவரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது பாகிஸ்தான் சிறையில் குல்பூஷண் ஜாதவ் உள்ளார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் துர்பாத் பகுதியை சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர் முப்தி ஷா மிர் என்பவர், ஈரானில் இருந்து குல்பூஷண் யாதவை பாகிஸ்தானுக்கு கடத்தி வந்ததாக இந்திய உளவுத் துறை குற்றம் சாட்டியது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளில் அவரை கொலை செய்ய இருமுறை மர்ம நபர்கள் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை துர்பாத் பகுதியில் உள்ள மசூதிக்கு முப்தி ஷா மிர் சென்றார். அங்கிருந்து அவர் வெளியே வரும்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் முப்தி ஷா மிர் படுகாயம் அடைந்தார். பாகிஸ்தான் போலீஸார், அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முப்தி ஷா மிர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

குல்பூஷண் ஜாதவின் கடத்தலில் தொடர்புடைய பாகிஸ்தானை சேர்ந்த முல்லா ஒமர் இரானி என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் துர்பாத் பகுதியில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவரது 2 மகன்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here