பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்: சவுதியில் ஒவைசி குற்றச்சாட்டு

0
151

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் விளக்குவதற்காக ரவிசங்கர் பிரசாத், சசிதரூர், கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு சவுதி அரேபியா சென்றுள்ளது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுதீன் ஒவைசி, சவுதி அரசுப் பிரதிநிதிகள் மத்தியில் பேசியதாவது:

நாமெல்லாம் முஸ்லிம் நாடுகள், ஆனால் இந்தியா முஸ்லிம் நாடல்ல என்ற பொய் பிரச்சாரத்தை அரபு நாடுகள் மற்றும் முஸ்லிம் நாடுகளிடம் பாகிஸ்தான் மேற்கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவில் 2.4 கோடி பெருமைமிக்க இந்திய முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எங்களது இஸ்லாமிய அறிஞர்கள் உலகின் எந்த அறிஞரையும் விட மிகச் சிறந்தவர்கள். அவர்கள் அரபு மொழியில் சிறந்தவற்றை பேச முடியும்.

பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு என்பதால் அந்நாட்டை இந்தியா காயப்படுத்துவதாக பாகிஸ்தான் கூறுவது பொய் பிரச்சாரம். தீவிரவாத குழுக்களை பாகிஸ்தான் ஆதரிப்பதை நிறுத்தினால் தெற்காசியாவில் ஸ்திரத்தன்மையும் முன்னேற்றமும் ஏற்படும்.

மே 9-ம் தேதி பாகிஸ்தானின் 9 விமான தளங்களை இந்தியா தாக்கியது. இந்தியா நினைத்திருந்தால் அவற்றை முற்றிலும் அழித்திருக்க முடியும். ஆனால் அந்தப் பாதையில் செல்வதற்கு எங்களை கட்டாயப்படுத்தாதே என்று எச்சரிக்கவே நாங்கள் விரும்பினோம்.

அமெரிக்காவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒருவர், இந்திய ராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்காக தொழுகை நடத்தியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பாகிஸ்தான் மீண்டும் எப்ஏடிஎப் கிரே பட்டியலில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் தீவிரவாத செயல்களுக்கு அந்நாடு நிதியுதவி அளிப்பதை நாம் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அசதுதீன் ஒவைசி பேசினார்.

இதற்கிடையில் கிரீஸ் நாட்டில் திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில், “அரசு ஆதரவு தீவிரவாதத்திற்கும் தனிநபர்கள் மற்றும் குழுக்களின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் இடையில் இனி வேறுபாடு காட்ட மாட்டோம் என்று இந்திய அரசும் எங்கள் பிரதமரும் தெளிவாக கூறியுள்ளனர். தீவிவாதத்தால் இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் இதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here