மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஈரானின் திருத்தப்பட்ட புதிய அமைதித் திட்டம் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய தூதராகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் மூலமாக இந்தத் திட்டம் பகிரப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா அனுப்பிய புதிய அமைதித் திட்டத்திற்கு ஈரான் பதிலளித்துள்ளது. அமெரிக்காவின் கோரிக்கைகள் மிக அதிகமாக இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்த போதிலும், இரு தரப்பும் தொடர்ந்து தகவல்களைப் பரிமாறி வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளில், ஈரானுக்கு போர்க்கால இழப்பீடு எதுவும் வழங்கப்பட மாட்டாது மற்றும் அந்நாடு ஒரே ஒரு அணுசக்தி நிலையத்தை மட்டுமே கொண்டிருக்க அனுமதிக்கப்படும் என்பவை அதில் முக்கியமானது என்று ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த ஞாயிறன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். ‘‘ஈரானுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வேகமாகச் செயல்படுவது நல்லது, இல்லையெனில் அவர்களுக்கு எதுவுமே எஞ்சியிருக்காது. நேரம் மிகவும் முக்கியமானது!’’ என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
